×

நெல்லை – செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கம்

*பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை : நெல்லை – செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை எக்ஸ்பிரசும் மின்சார இன்ஜினில் இயக்கப்பட உள்ளது.நூற்றாண்டு பெருமை கொண்ட நெல்லை – கொல்லம் வழித்தடத்தில் கடந்த சில மாதங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வழித்தடத்தில் நெல்லை முதல் செங்கோட்டை வரை மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இவ்வழித்தடத்தில் சமீபகாலமாக ரயில்கள் வேகமாக இயக்கப்பட உள்ளன. நெல்லை – தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 70 கிமீ வேகத்தில் இருந்து 110 கிமீ வேகத்தில் செல்ல வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கடந்த மே மாதம் 7ம் தேதி ரயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டு, பாசஞ்சர் ரயில்கள் 10 நிமிடங்கள் முன்னதாகவே சென்று சேர வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (17ம் தேதி) முதல் சில பாசஞ்சர் ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளன. அதன்படி நெல்லையில் காலையில் 7 மணிக்கு புறப்படும் நெல்லை – செங்கோட்டை ரயில்(எண்கள்.06685, 06684) இரு மார்க்கத்திலும் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்பட உள்ளது.

இதேபோல் பிற்பகல் 1.50 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில் (06687, 86) மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை ரயில் (06657, 06682) ஆகிய ரயில்கள் இரு மார்க்கத்திலும் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளன. இதற்கான இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து காலை காலை 9.45 மணிக்கு கிளம்பி செல்லும் நெல்லை – கொல்லம் – நெல்லை பாசஞ்சர் ரயில்கள் (எண்.06681, 06658) மட்டும் டீசல் இன்ஜினில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஆரியங்காவு, தென்மலை பகுதிகளில் இன்னமும் மின்மயமாக்கல் நிறைவு பெறவில்லை என்பதால், அந்த ரயில் நெல்லையில் இருந்தே டீசல் இன்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரசும் (எண்.20683) வரும் திங்கள் முதல் நெல்லை – செங்கோட்டை மார்க்கத்தில் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்பட உள்ளது. அந்த ரயிலானது தாம்பரம் முதல் திருவாரூர் வரையும், அதன் பின்னர் காரைக்குடி முதல் செங்கோட்டை வரையிலும் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருவாரூர் தொடங்கி காரைக்குடி வரை மட்டும் டீசல் இன்ஜின் பொருத்தி இயக்கப்படும்.

நெல்லை – செங்கோட்டை மார்க்கம் மின்மயமாக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக மின்சார இன்ஜினில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை தாம்பரம் – செங்கோட்டை ரயில் பெற உள்ளது. நெல்லை – செங்கோட்டை மார்க்கத்தில் கடந்த சில தினங்களாக மின்சார ரயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் மின்சார இன்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

25 ஆயிரம் வாட் மின்சாரம் பாயும்

இன்று முதல் நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடப்பவர்கள் அருகில் செல்லும் மின்கம்பிகளை தொடுதல், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மின்கம்பிகள் அருகேயுள்ள மரக்கிளைகளில் தீவனம் பறிப்பது, தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் பேசுவது உள்ளிட்ட செயல்களை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வழித்தடத்தில் 25 ஆயிரம் வாட் மின்சாரம் எப்போதுமே இருக்கும் என்பதால், கிராமப்புற மக்கள் தண்டவாளம் அருகே எச்சரிக்கையுடன் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The post நெல்லை – செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Chengkotta Markam ,Nederalam ,Chengkotta Margam ,Shekotta Markam ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...